2020ஆம் ஆண்டுக்கான புலனாய்வில் சிறப்பாக பணியாற்றியதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஏ.பொன்னம்மாளும் ஒருவர்.
சிறுமிகள் மீதான வன்முறை, பெண்களுக்கு எதிரான வழக்குகள் ஆகியவற்றை பொன்னம்மாள் திறம்பட விசாரணை மேற்கொண்டதன் பலனாக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் முதன்மை காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்து, 2016ஆம் ஆண்டில் காவல் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். தற்போது, நீலகிரி மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த விருது கிடைத்ததன் பின்னணி குறித்து பொன்னம்மாள் கூறுகையில், 'காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பது எனது மிக முக்கியமான பழக்கம். அதிலும், குழந்தை திருமணத்தைத் தடுப்பது, பாலியல் ரீதியான வழக்குகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது என அதிக கவனம் செலுத்தி வந்தேன். விவசாய பின்னணியிலிருந்து வந்ததாலேயே எளிய மக்களின் பிரச்னைகளை என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது' என்றார்.
இவருடைய நடவடிக்கைகளில் முக்கியமான வழக்காக கோத்தகிரி அருகே நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். கோத்தகிரி அருகே கைத்தலா பகுதியில், தனது 16 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், அவளை கருத்தரிக்க வைத்த தந்தைக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளார், பொன்னம்மாள்.
கடந்த 2017ஆம் ஆண்டில் குன்னூர் மகளிர் காவல் நிலையத்தில், அந்நபர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர். வழக்கு உதகை மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, டி.என்.ஏ., சோதனைக்கு உட்படுத்தி சம்பந்தப்பட்ட நபருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு முடித்ததற்காகவே, இந்த விருது காவல் ஆய்வாளர் பொன்னம்மாளுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெண் காவலர்களுக்கான விருது வழங்கும் விழா திருவள்ளூரில் நடைபெற்றது!