நீலகிரி: உதகையில் இரண்டாவது பருவநிலை தொடங்கியுள்ளதால், புதுமணத் தம்பதிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மலைகளின் அரசியான உதகையில், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது பருவநிலைக் காலமாகும். இந்தக் காலத்தில் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துசெல்வார்கள். இந்த ஆண்டும் வழக்கம்போல இரண்டாவது பருவநிலை காலம் தொடங்கியிருந்தாலும், கரோனா ஊரடங்கு காரணமாக, களையிழந்து காணப்படுகிறது.
குறிப்பாக கரோனா ஊரடங்கால் மூடப்பட்டு 172 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட உதகை அரசு தாவரவியல் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வெளி மாநிலச் சுற்றுலாப் பயணிகள் வர இ-பாஸ் கட்டாயம் தேவை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதே இதற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் புதுமண தம்பதியினருக்கு இ-பாஸ் எளிதாக வழங்கப்படுகிறது. இதனால் உதகைக்கு ஏராளமான தேனிலவு தம்பதியினர் வருகைதர தொடங்கியுள்ளனர்.
தம்பதியர் தாவரவியல் பூங்காவை காண அதிக ஆர்வம் காட்டுவதால் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று (அக்டோபர் 3) காலைமுதல் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் உதகையில் இரண்டாவது பருவம் களைகட்ட தொடங்கியுள்ளது.