சென்னை: நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில், தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய தர்மலிங்கம் என்பவர், அக்கல்லூரியில் பணியாற்றிய உதவிப் பேராசிரியை ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். உதவிப் பேராசிரியை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி, கல்லூரி முதல்வரின் உத்தரவின் பேரில் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்தை ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு முடிந்து திரும்பியபோது, பேராசிரியர் தர்மலிங்கம் உதவிப் பேராசிரியையிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். உடலுறவு குறித்தும், பேராசியையின் உடலை வர்ணிக்கும் வகையிலும் பேசியதாகத் தெரிகிறது.
தர்மலிங்கத்தின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை, இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வராக இருந்த ஈஸ்வரமூர்த்தியிடம் புகார் அளித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் பேராசிரியர் தர்மலிங்கம் செய்தது தவறு என்றும், அவரது புகார் தொடர்பாக கல்லூரியின் உள்ளகக் குழுவிடம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு பேராசிரியையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஈஸ்வரமூர்த்தி, தர்மலிங்கம் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததாகவும், அதனை நகலெடுத்து உள்ளகக் குழுவுக்கு அனுப்பி வைத்ததாகவும், விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பிய பிறகு உதவிப் பேராசிரியைக்கும் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அத்தகைய மன்னிப்புக்கடிதம் எதுவும் உள்ளகக் குழுவுக்கு அனுப்பப்படவில்லை என்பதை அறிந்த பேராசிரியை, இதுதொடர்பாக ஈஸ்வரமூர்த்தியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது, வாய்மொழியாக கூறப்படும் புகார்களை குழுவுக்கு அனுப்ப முடியாது என்றும், எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கும்படியும் கோரியுள்ளார். புகாரோடு, தர்மலிங்கத்தின் மன்னிப்புக் கடிதத்தை இணைத்து அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.
தர்மலிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நினைத்த பேராசிரியைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஊட்டியில் இருந்து 150 கி.மீ தொலைவில் காங்கேயத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். கல்லூரியில் நல்லிணக்கத்தை பராமரிப்பதற்காகவே பேராசிரியை இடமாற்றம் செய்யப்படுவதாக இடமாற்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய பேராசிரியை, இடமாற்ற உத்தரவுக்குத் தடை பெற்றார்.
இதைத் தொடர்ந்து நீதிக்காக களத்தில் இறங்கிய பேராசிரியை, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், கல்லூரி கல்வி இயக்ககம், மாவட்ட ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறை போன்ற பல இடங்களுக்கும் தனது புகாரை அனுப்பி வைத்தார். அதன்படி, பாலியல் துன்புறுத்தல், எஸ்.சி.- எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம், தர்மலிங்கத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது.
இதன் பின்னர், கடந்த ஜூன் 22ஆம் தேதி கல்லூரிக் கல்வி இயக்குநராக ஈஸ்வரமூர்த்தி பதவி உயர்வு பெற்றார். அதன் எதிரொலியாக பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டார். மறுபுறம் இதுதொடர்பான வழக்கில் பேராசிரியை, தர்மலிங்கம் இருவரையும் நேரில் அழைத்து விசாரித்து, தர்மலிங்கம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் வெவ்வேறு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி பாதிக்கப்பட்ட பேராசிரியை சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகும் அவர் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாவும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டுள்ளார். புதிதாக சென்ற கல்லூரியில், பேராசிரியைக்கு எதிராக கெஸ்ட் லெக்சரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக பட்டியலின அறிவுசார் கூட்டுக்குழு (Dalit Intellectual Collective) மூலம் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. எம்ஐடிஎஸ் (MIDS) இணைப் பேராசிரியர் சி.லட்சுமணன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு சம்மந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்தினர். அதில்தான் இந்த முழு பின்னணியும் வெளியே வந்துள்ளது.
பட்டியலின உதவிப் பேராசிரியை பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக இந்த குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளையும் இக்குழு முன்வைத்துள்ளது.
அதில், " தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியை அளித்த புகார் மீது கல்லூரி உள்ளகக் குழு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பான புகார்கள் யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஈஸ்வரமூர்த்தியும், குற்றம்சாட்டப்பட்ட தர்மலிங்கமும் படுகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தர்மலிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி உள்ளகக்குழு சமர்ப்பித்த அறிக்கையை ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பவில்லை. தனது சமுதாயத்தைச் சேர்ந்தவரை காப்பாற்ற ஈஸ்வரமூர்த்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். பட்டியலின பேராசிரியை சுமார் ஓராண்டாக இத்தகைய கொடுமைகளை அனுபவித்துள்ளார்.
பேராசிரியைக்கு எதிராகப் போராடிய விரிவுரையாளர்களும் படுகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஈஸ்வரமூர்த்தியின் தூண்டுதலால் இவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த கல்லூரியில் விரிவுரையாளர்கள் நியமனங்களிலும் சாதிய ரீதியான பாகுபாடுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதும், அவமதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் இந்த சாதிவெறிக் கொடுமைகள் நடந்து வருகின்றன.
ஈஸ்வரமூர்த்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட வாய்ப்புள்ளதால், அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்கிறோம். அதேபோல், பாலியல் தொல்லை கொடுத்த தர்மலிங்கத்தை பணி நீக்கம் செய்ய வேண்டும் என இந்த குழு பரிந்துரை செய்கிறது.
பாதிக்கப்பட்ட பேராசிரியையின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய விரிவுரையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த குழு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.