மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் - கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணமாக உள்ளனர்.
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காண காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களில் கூட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, மே 17ஆம் தேதி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. இதனால் கிக்யூ புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கபட்டுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் அதிலிருந்து தப்பிக்கும் விதமாகவும் குளு குளு கால நிலையில் சுற்றுலாத் தலங்களை காண உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வரத் தொடங்கி உள்ளதால் மலைகளின் அரசியான ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ளது.