உதகை: சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மீதான கன்டோன்மென்ட் வழக்கு தொடர்பாக, தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு கன்டோன்மென்ட் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வளாகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிலர் தாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கன்டோன்மென்ட் நிர்வாகம் தரப்பில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது,
இதில் தொடர்ந்து ஆஜராகாத சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், அதிமுகவைச் சேர்ந்த பாரதியார் (ஓபிஎஸ் அணி நீலகிரி மாவட்டச்செயலாளர் மற்றும் அப்போது துணைத்தலைவருக்கு போட்டியிட்டவர்) மற்றும் அப்போது திமுக தரப்பில் துணைத் தலைவருக்காக போட்டியிட்ட வினோத் ஆகிய மூன்று பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தொகையை எடப்பள்ளி ஷிரடி சாய்பாபா கோயில் டிரஸ்டிற்கு வழங்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.