தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றவருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் சென்ற மாதம் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 5ஆம் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து விளக்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக 396 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உதகை நகராட்சியில் 76, குன்னூரில் 39, கூடலூரில் 43, நெல்லியாளத்தில் 39 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சிகளில் உள்ள 108 வார்டுகளில் 197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டுகளில், 199 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் ஆயிரத்து 300 வாக்காளர்கள் இருக்கும்வகையில் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டிலும் ஆயிரத்து 300-க்கு உட்பட்டே வாக்காளர்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேத்தி பேரூராட்சியில் ஆண், பெண் எனத் தனித்தனியாக இருந்த வாக்குச்சாவடிகள், பொது பாலினத்தவர் என ஒரே வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல புளியம்பாறையில் மக்கள் வெகு தூரம் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதால் கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: குடிநீர் ஆலை விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் - வேலூர் மாவட்ட ஆட்சியர்!