நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 222 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 94 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 128 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் நேற்று (ஜூலை 14) ஒரே நாளில் 40 பேர் பாதிப்படைந்தனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த பலருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “ நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, தனியார் ஊசி தொழிற்சாலையின் மூலம் 111 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்றைய 40 பேர் பாதிப்பில், 30 பேருக்கு கிராமத்தில் நடைபெற்ற இரண்டு திருமணம் மற்றும் ஒரு துக்க நிகழ்ச்சியில், கரோனா தொற்றுடைய நபர் ஒருவர் கலந்துகொண்டதன் மூலம் அவரிடமிருந்து தொற்று பரவியுள்ளது. இந்த 30 பேர் சுமார் எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உதகை தலைமை மருத்துவமனையிலேயே கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கையாக 700 படுக்கை வசதிகொண்ட கரோனா கேர் சென்டர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தொற்று உறுதி செய்யபட்ட நபர் இதுபோன்ற பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற விழாக்களை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:உயிரிழந்த முதியவருக்கு கரோனா உறுதி - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பீதி