நீலகிரி: தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகச் சாலை, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்படுவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ள நிலையில் கனமழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் என சமூக ஆர்வலர் தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பேரில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது விதிமீறல் கட்டடங்களுக்குச் சீல் வைத்து வருகின்றனர்.
இருப்பினும், கட்டிடங்களின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் கட்டுமானங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதில் கடந்த 1978ம் ஆண்டு பெய்த கனமழையின் பாதிப்பில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே போன்று 1989 மஞ்சுர் கெத்தை பகுதியில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக 43 பேர் பலியானதுடன் நீலகிரி மாவட்ட சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டம் தீவு போல் காட்சி அளித்தது, உணவுப் பொருட்கள் பால் பொருட்கள் போன்றவை கர்நாடகா கேரளா வழியாக நீலகிரிக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் வீடுகள் இடிந்து வருகின்றன. இதன் காரணமாக நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குன்னூர் தேயிலைத் தோட்ட உரிமையாளர் நஞ்சுண்டன் கூறுகையில், “உதகை குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதி, மலைகள், தேயிலைத் தோட்டங்களை அழித்து சொகுசு விடுதிகள் கட்டிடங்கள் உள்ளிட்டவை தற்போது கட்டப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக யானைகளின் வழித்தடம் அளிக்கப்படுவதால் வனவிலங்குகள் சர்வ சாதாரணமாகக் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது.
இதன் காரணமாக மனித வனவிலங்கு மோதல் அதிகரித்து பரிதாபமாகப் பலர் இதுவரை உயிரிழந்து வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக விளங்கும் தேயிலை விவசாயத்தை அளிக்கும் வகையில் தற்போது தேயிலைத் தோட்டங்கள் நடுவே கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவும் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் மேலும் மாவட்டத்தில் தேயிலைக்கு அதிக விலை கிடைக்காததால் தேயிலை விவசாயிகள் தேயிலைத் தோட்டங்களை விற்று விடுகின்றனர். அரசு பசுந்தேயிலைக்கு அதிக விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனங்களை அழித்து சொகுசு விடுதிகள் கட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தேயிலை தொழிலைக் காப்பாற்றவேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து சமூக ஆர்வலர் மனோகரன் பேசுகையில், “ விதிமீறிய கட்டடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேயிலைத் தோட்டங்களை அழித்தும், மலையைக் குடைந்தும், பாறைகளை உடைத்தும் சொகுசு விடுதிகள் கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பகுதிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஏராளமான சட்ட திட்டங்கள் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்திற்குப் பேரழிவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!