அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் எம்.ராமசாமி கோத்தகிரியில் உள்ள படுகர் இனத்தவரின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயிலில் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, நீலகிரி பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்தார்.
நீண்டகால கோரிக்கையான படுகர் இனத்தவரை எஸ்.டி. (பழங்குடியின) பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கோத்தகிரியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கலைசெல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.