நீலகிரி மாவட்டம் கூடலூர், அதனைச் சுற்றியுள்ள பந்தலூர், ஓவேலி பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத் துறை சார்பாக அகழிக் கால்வாய், சோலார் மின் கம்பிகள் போன்றவற்றை அமைத்தும் பயனளிக்காமல் தொடர்ந்து யானைகள்-மனிதர்கள் மோதல் அதிகமாகிவருகிறது.
தோரணங்களாகிய மதுபாட்டில்கள்
இதனிடையே யானைகள் அதிகமாக நடமாடும் மண்வயல், செம்பங்கொல்லி பகுதிகளில் அப்பகுதி மக்கள் புதிய யுக்தியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் சாலைகள், பொது இடங்களில் மது அருந்திவிட்டு வீசக்கூடிய காலி மதுபாட்டில்களை வீடுகள், விவசாய தோட்டங்களைச் சுற்றி கம்பிகள் அமைத்து அதில் தோரணங்களாகக் கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
யானைகளை பயமுறுத்தும் சத்தம்
இரவில் வரும் காட்டு யானைகள் கம்பியைத் தொடும்போது கண்ணாடி பாட்டில்களில் ஏற்படும் உராய்வின்போது உருவாகும் சத்தத்தால், திரும்பிச் செல்கின்றன. மேலும் மக்களும் உஷாராகி யானையை விரட்டுவதும் தங்கள் பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பதற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்கின்றனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், "காட்டு யானைகள் வீட்டின் அருகில் வருவதை அறிந்து, பாதுகாப்பாக இருக்க வசதியாக எளிய முறையில் இதுபோன்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். இது ஓரளவு பயன் அளித்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: