நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக உயிரிழப்புகளும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகளும் முழுவதுமாக சேதமடைந்தன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உதகை அருகே குருத்து குளி கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விமலா, சுசிலா ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கப்பத்தொரை, பாலாடா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டு, கனமழையால் வீடு இழந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்குத் தமிழ்நாடு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும், வெள்ளப் பாதிப்புக்கு ஆறுகள், கால்வாய்களை அரசு தூர்வாராமல் மெத்தனமாக இருந்ததே காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி குறை சொல்வதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தற்போது பாதிக்கப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்களை அதிகளவில் குத்தகைததாரர்கள் பயிரிட்டுள்ளதால், மாநில அரசு இழப்பீட்டை பாதிக்கப்பட்ட குத்தகைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதேபோல் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யும் போதே, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் நீர்நிலைகளில் குடியிருக்கவும், மின்கட்டணம் வசூலிக்கவும், வரிவசூலிக்கவும் செய்வது கண்டிக்கத்தக்கது, ஆக்கிரமிப்பு செய்யும் போதே தடுத்திருந்தால், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்றும், எனவே அரசு நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.