உதகையில் உள்ள பாம்பேகேசில் பகுதியில் இன்று வழக்கம்போல் துப்புரவு தொழிலாளி சிவராஜ் என்பவர் வீடு வீடாக சென்று குப்பை கழிவுகளை வாங்கியுள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சேட் என்பவருக்கும் சிவராஜீக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சிவராஜ் மீது குப்பையை சேட் வீசியதாகத் தெரிகிறது. அதனால் சேட்டுக்கும் துப்புரவு பணியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினை சிவராஜ் சக துப்புரவு பணியாளர்களிடம் தெரிவித்ததையடுத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் உதகை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்ட அவர்கள், பின்னர் மார்க்கெட் பகுதிக்குச் சென்று அங்கேயும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு விரைந்து வந்த உதகை பி1 காவல் துறையினர் துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்க மறுத்த துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்த சேட்டுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேட் மன்னிப்புக் கோரியதையடுத்து துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர். இதனால் உதகை நகரில் சுமார் இரண்டு மணி நேரம் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன.