2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கணக்கெடுப்பில், இந்த முறை நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் நன்மைகள், தவறுகளை சரி செய்துகொண்டு முறையாகவும், முழுமையாகவும் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்சோதனை மக்கள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதற்காக தமிழ்நாட்டில், மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் நீலகிரி மாவட்டம் குன்னூரும் ஒன்று. இதனைத் தொடர்ந்து, குன்னூரில் நகராட்சி அலுவலக அரங்கில் முன்சோதனை மக்கள் கணக்கெடுப்பு பயிற்சி தொடங்கியது. இதில் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்ரனர். இதற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். சென்னையில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஜெகதீஷன், முதன்மை பயிற்சியாளர்கள் இளையராஜா ஆகியோர், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இவர்கள் பயிற்சி பெற்ற பிறகு, குன்னூர், மேலுார் உட்பட நான்கு கிராமங்களில் இந்த முன்சோதனை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு டெல்லியில் உள்ள தலைமையிடத்திற்கு ஆய்வறிக்கைகள் முழுமையாக அனுப்பப்பட உள்ளன.