நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் குன்னூர் வி.பி தெருவில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், " தற்போது இங்கே மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 50 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி மாறி உங்களை ஏமாற்றிக்கொண்டு வந்துள்ளது. ஒரு ஊழல் கட்சியை நீக்குவதற்கு மற்றொரு ஊழல் கட்சி இருக்க முடியாது. வறுமைக்கு இலவசம் என்பது மாற்றாக இருக்க முடியாது. அதற்கு ஊழலற்ற கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.
60 ஆண்டுகளாக ஊட்டிக்கு நடிக்க வந்துள்ளேன். நட்சத்திர அந்தஸ்தில் இருந்தபோதும் மக்களுக்கு பதில் சொல்வதற்காக தற்போது உங்களுக்காகவே வந்துள்ளேன். சுற்றுலா மையமான இங்கு துர்நாற்றத்தைக்கூட கவனிக்காமல் அரசுகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதுமே இந்த நிலை நீடிக்கிறது.
மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் ஊழல் இல்லா ஆட்சியை தொடர பதிவு பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளனர். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு வழங்கப்படும் நிதி மற்றும் திட்டங்கள் மக்களை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். மக்களுக்கு நிலப்பட்டா வேண்டும் என்றால் யாருக்கும் நீங்கள் கையூட்டு கொடுக்க வேண்டியதில்லை" என்றார்.