நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியில் வீடு, கடைகளை சேதப்படுத்தி வரும் இரண்டு காட்டு யானைகளை விரட்ட முதுமலையிலிருந்து வில்சன், உதயன், ஜான் ஆகிய மூன்று கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
இந்த கும்கி யானைகளை கொண்டு காட்டு யானைகளை விரட்டும் பணி கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இன்று (ஏப்.23) கரியசோலை அருகே முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகளை கும்கி யானைகள் கொண்டு விரட்டும் பணி நடந்துவந்தது.
இந்தச் சூழ்நிலையில் வில்சன் கும்கி யானைக்கு திடீரென மதம் பிடித்தது. வில்சன், சக கும்கி யானையான உதயனை துரத்தத் தொடங்கியது. யானையை கட்டுப்படுத்த முயன்ற பாகனையும் வில்சன் துரத்தியது.
இதில் அவர் நல்வாய்ப்பாக காயம் எதுவுமின்றி தப்பினார். வெகு நேரம் கழித்து வில்சனை பாகன்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது வில்சன் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
யானை வனப்பகுதியை ஒட்டி கட்டப்பட்டுள்ளதால் பாகன்கள் லாரியில் தங்கி, அருகில் தீ மூட்டி யானைக்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றனர். நாளை(ஏப்.24) வில்சனை லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!