நீலகிரி: கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட், பங்களாவுக்குள் 2017 ஏப்ரல் 23 அன்று நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலைசெய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரை காவல் துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் சேலம் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
வழக்கு மேல் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு, அனைவரும் பிணையில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கின் திருப்புமுனையாக கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காவல் துறையினர் மூலம் மேல் விசாரணை செய்ய மனு தாக்கல்செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து சயான், உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜ் மனைவி, மைத்துனர், கனகராஜ் பணிபுரிந்த நிறுவன உரிமையாளர் உள்பட பலரிடம் மறு விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.
சயான், வாளையாறு மனோஜ் நேரில் ஆஜர்
இந்த வழக்கின் விசாரணை இன்று (அக். 1) உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் முன்னிலையாகினர்.
அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் முன்னிலையாகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு கால அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன்பேரில் நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும்போது, "காவல் துறையினர் புலன் விசாரணை நடத்திவருகின்றனர், 34 நபர்களிடம் நடத்தப்பட்டது. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆதாரங்கள், மின்னணு ஆதாரங்களைச் சேகரித்துவருகிறோம்.
தற்போதுவரை நடந்த விசாரணை குறித்த சீல்வைக்கப்பட்ட கோப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைக்கு கால அவகாசம் கோரினோம். விசாரணை அக்டோபர் 29ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை வாங்கிய டாடா நிறுவனம்?