நீலகிரி: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஆத்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். மேலும், மற்றொரு நபரான சயான் தனது காரில் குடும்பத்தினர் உடன் சென்று கொண்டிருந்தபோது, கேரள மாநிலம் கண்ணாடி என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டது.
இதில் சயான் காயம் அடைந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், இது வரையில் 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதியாக இருந்து கோடநாடு வழக்கினை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நீதிபதி முருகன் சேலம் தொழிலாளர் நல (லேபர்) நீதிமன்றத்திற்கும் மற்றும் நீதிபதி நாராயணன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக எ.அப்துல் காதர் புதிதாக பொறுப்பேற்க உள்ளதாகவும் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு!