நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 3 பேரை தாக்கி கொன்ற ஆட்கொல்லி யானை நான்கு நாட்கள் வரை வனப்பகுதி முழுவதும் தேடியும் தென்படாத நிலையில் வனத்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அந்த யானை கோடமலை வனப்பகுதி வழியாக கேரளா எல்லை பகுதிக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் கேரள வனத்துறையினரின் உதவியைக் கோரி இரு மாநில வன துறையினர் ஆட்கொல்லி யானையை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில் இருந்து கேரள வனதுறையினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்துள்ள இந்த யானையை கண்காணித்த கேரளா வனத்துறையினர் அதன் ஒளிப்பதிவு காட்சிகளையும் புகைப்படங்களையும் தமிழ்நாடு வனத்துறையினருக்கு அனுப்பிவைத்தனர். சுமார் 60 கிலோமீட்டர் வனப்பகுதி வழியாக இந்த யானை தமிழ்நாடு பகுதிக்கு வந்து மனிதர்களை தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டது.
இன்று தமிழ்நாடு வனத்துறை சார்பாக நிலம்பூர் வனப்பகுதிக்கு வனத்துறை குழு கேரளாவிற்கு சென்றுள்ளனர். அந்த யானை அங்கு தென்பட்டால் அதனை தமிழ்நாடு பகுதிக்கு விரட்டி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த யானை இந்த பகுதியில் உள்ளதா என்பது என்பதனை கண்டறிய தொடர்ந்து ஐந்தாவது நாளாக 25 தானியங்கி கேமராக்கள், 3 ட்ரோன் கேமராக்கள், 4 கும்கி யானை உதவியுடன் சுமார் 70 வன களப்பணியாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் கேரளாவில் சுற்றி திரிந்த இந்த ஆட்கொல்லி யானையை கண்டறிந்து கேரள வனத்துறையினர் அனுப்பி வைத்த புகைப்படம் மூலம் இரு மாநில வனத்துறையினர் மத்தியில் இந்த யானை போக்கு காட்டி வருவது தெரிய வந்துள்ளது.