நீலகிரி: கூடலூரை அடுத்த தேவர் சோலை, தேவன் எஸ்டேட், மேபீல்டு ஆகிய பகுதிகளில் புலி ஒன்று மாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வருகிறது.
இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிய புலி 3 மனிதர்களையும் தாக்கி கொன்றது. இதனால் மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடித்து சென்னை வண்டலூரிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதனையொட்டி அப்பகுதி முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் மருத்துவக் குழுவோடு இணைந்து 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈட்டுபட்டு வருகின்றனர்.
அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து 15 பேர் கொண்ட குழு புலியைத் தேடுவதற்காக முகாமிட்டுள்ளனர்.
இருப்பினும் புலி, தேயிலைச் செடி வழியாக வனப்பகுதிக்குள் சென்று தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. இதனையடுத்து புலியை தேடும் பணி 6வது நாளாக தொடருகிறது.
இரவு நேரங்களில் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புலி தாக்கி மாடு மேய்க்க சென்றவர் உயிரிழப்பு