நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் நீர், குன்னுார் பேருந்து நிலையம் ஓடை, சிற்றாறு என்ற லாஸ் அருவியில் சங்கமித்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்த நீரில், பல்வேறு கழிவுகள் கலப்பதாகப் புகார் உள்ளது. இந்த நீரை யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் குடிப்பதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (டிச. 25) குன்னூர் ஆற்றில் நுரையுடன் கூடிய மாசு கலந்த நீர் அதிக அளவில் வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் ஆற்று நீர் மாதிரியை சோதனைக்காகச் சேகரித்தனர். இந்த மாசு கலந்த நீரை கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த நீரை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் நீலகிரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் வனத் துறையினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி!