நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி மாத இறுதி வரையான குளிர் காலத்தில் நல்ல பனிப்பொழிவு காணப்படும். கடந்த ஆண்டு இறுதியிலிருந்து பெய்த தொடர் மழை காரணமாக பனிக்காலம் சற்று தாமதமாக தொடங்கியது. இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய பனி பொழிவால் தொடக்கத்தில் குளிரின் தாக்கம் குறைவாக காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.
இதனால் குளிரின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் நேற்று(பிப்.11) மாலை உதகையில் கடுங்குளிர் நிலவியது. இதனையடுத்து இன்று அதிகாலை உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் கடும் பனி பொழிவால் உறைபனி மூடியுள்ளது. இதனால் உதகை தாவரவியல் பூங்கா புல்வெளி உறை பனியால் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சியளித்தது.
அதேபோல காந்தல் மைதானம், தலைகுந்த புல்வெளி என நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல உறைபனி காட்சி அளித்தது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் சுமார் 1 சென்டி மீட்டர் உயரத்திற்கு உறை பனி படிந்திருந்தது. இந்த பனிப்பொழிவு காரணமாக இரவு 7 மணி முதல் காலை 10 மணிவரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இன்று(பிப்.12) பெய்த கடுமையான பனிப்பொழிவால் உதகையில் என்றுமே இல்லாத அளவு இன்று(பிப்.12) காலை கடுமையான குளிர் நிலவியது. உறைபனி காரணமாக உதகை தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 0.4 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது.
இதையும் படிங்க:ஆட்கொல்லி யானை சங்கரைப் பிடிக்கும் பணி தீவிரம்