பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழி உள்ளிட்ட 21 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவர்களை எரியூட்டும் மயானத்தில் ஏற்படும் புகையால் காற்று மாசுபட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் முதன்முறையாக நீலகிரி வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில், தனியார் தொண்டு நிறுவனமான ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, எல்.பி.ஜி., கேஸ் மூலமாக எரியூட்டும் மயான மையம் அமைக்கப்பட்டது. மேலும் இப்பகுதி முழுதும் பசுமையை ஏற்படுத்தும் விதமாக அலங்கார மரங்களும், அரியவகை பூக்கும் மரங்களும் நடவு செய்யப்பட்டன.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத இந்த எரியூட்டும் மையத்தை வெலிங்டன் ராணுவ மைய கமாண்டன்ட் பிரிகேடியர் ஆர்.எஸ். கொரையா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கிவைத்து ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் எரியூட்டும் மயான மைய தொடக்க விழாவில் பல்வேறு பள்ளி மாணவ மாணவியரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து சிறப்பித்தனர்.