நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மரங்கள் விழுந்து, மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு(அக்.09) பெய்த மழையினால் குன்னூர் மேட்டுப்பாளையம், மலை ரயில் பாதையில் ரன்னிமேடு அருகே மண்சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்தன. ரயில்வே ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாறைகள் மற்றும் மண்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சரிவு ஏற்பட்டுள்ளதை ரயில்வே ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனே காலை 7.10 மணிக்கு 170-க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்ட மலைரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி விடப்பட்டது.
அனைத்துப் பயணிகளும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு, பேருந்து மூலம் குன்னூர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ