நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களுக்கு மேலாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து, ஆங்காங்கே மரங்கள் விழுந்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு (அக்.02) பெய்த பலத்த மழையினால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு அருகே ராட்சதப் பாறை விழுந்தது. தொடர்ந்து, இன்று (அக்.03) காலை ரயில்வே டிராக்மேன் ஊழியர்கள் ஆய்வுக்கு செல்லும் வழியில் பாறை விழுந்திருந்ததைப் பார்த்து ரயில்வே உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காலை 7.10 மணிக்கு 170க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ராட்சத பாறையுடன் போராடி தண்டவாளத்திலிருந்து அதனை அகற்றினர்.
பின்னர் ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மலை ரயில் மூன்று மணி நேரம் தாமதமாக மதியம் 1.30 மணிக்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் மற்றும் உணவின்றி அவதியடைந்தனர்.
இதையும் படிங்க:கிடைத்தது பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்... இவர்கள் தானா?