நீலகிரி: கடந்த மாதம் 19ஆம் தேதி வாழவயல் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய PM2 மக்னா யானை, பாப்பாத்தி என்ற மூதாட்டியைக் கொன்றது. இதையடுத்து அந்த யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் யானையைப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 21ஆம் தேதி முதல் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மக்னா யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள புளியம்பாறை, வாட்சிக்கொள்ளி, தேவாலா உள்ளிட்டப் பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி, பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை சென்றதைக் கண்டறிந்தனர்.
கடந்த 18 நாள்களாக தொடர்ந்து மக்னா யானை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. நேற்றிரவு (டிச.07) தேவாலா வாட்சிக் கொல்லி பகுதியில் குடியிருப்பில் சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் பின் தொடர்ந்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் மையக்கொல்லி எனும் பகுதியில் இரண்டு மருத்துவர்கள் கும்கி யானைகள் மீது அமர்ந்தவாறு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர். யானை பிடிப்பட்டுள்ள இடத்தில் விஜய், சுஜய், கிருஷ்ணா, வசிம் ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர், பிடிபட்ட யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் சாலையைக் கடந்த யானைகள் கூட்டம்