நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 688 சதுர.கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிக்க, தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக வனத்துறை சார்பில் வாகன சவாரி, யானை சவாரி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யபட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றால், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் சிலருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
குறிப்பாக சுற்றுலா மாவட்டமான நீலகிரியானது கேரள, கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளது. எனவே இம்மாவட்டத்திற்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் கூடும் சுற்றுலா தலங்களில் கிருமி நாசினி கொண்டு, தூய்மை செய்யும் பணியை மாவட்ட நிர்வாகம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் கொரோனா நோய்த் தொற்று எதிரொலியாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று( திங்கட்கிழமை) முதல் அனுமதி இல்லை எனவும், ஆனால் உள் மாவட்ட, மாநில, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு எந்தக் கட்டுபாடும் இல்லை எனவும் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் தெரிவித்துள்ளார்.