நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, பசுமையான மாவட்டத்தை பேனிக்காப்பது உள்ளிட்ட பணிகளைத் தன்னார்வத்துடன் செயல்படுத்த நீலகிரியில் உள்ள பொறியியல் துறை, சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடனான கருத்தாய்வு கூட்டம் குன்னூர் கேத்தி மைனலா பகுதியில் மைண்ட் எஸ்கேப் அமைப்பின் சார்பில் நடைபெற்றது.
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ் கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய பி.டி.ஆர்.பழனிவேல் , "முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்தி வருகிறார். வளர்ச்சி என்பது யாரும் விட்டுவிடாத வகையில் இருக்க வேண்டும் என அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் செல்வம், வாய்ப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான வழியில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு, கவனமாக இருக்கிறது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், இந்து வெளியீட்டு குழுமத்தின் இயக்குநர் என்.ராம், பெடரல் வங்கித் தலைவர் சி.பாலகோபால், உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனக் கண்காணிப்பாளர் சங்கீத் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நீலகிரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.