நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் படையெடுப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பெய்த மழையால் யானைகள் விரும்பி உண்ணும் பலா பழங்கள், புல் வகைகள் செழிப்பாக வளர்ந்து காணப்படுவதால் அவற்றை தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன.
சமவெளிப் பகுதிகளில் போதுமான உணவு கிடைக்காததால் மலைப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, யானைக் கூட்டங்கள் வரத் தொடங்கிய நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சென்று அரிசி போன்ற உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது.
ஊரடங்கு என்பதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குறைந்தளவு வாகனங்கள் மட்டுமே இயங்குவதால், சாலையோரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று முகாமிட்டு, அங்குள்ள பலாப் பழங்களை உண்டு வருகின்றது. சாலையில் வரும் ஒற்றைக் காட்டு யானை நீண்ட நேரம் சாலையிலேயே முகாமிட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
பழங்குடியின கிராமத்திற்கு நடந்துசெல்லும் பழங்குடியினரையும் விரட்டி வரும், இந்த ஒற்றைக் காட்டு யானையை வனத்துறையினர் உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பழங்குடியின மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.