நீலகிரி: மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபட முயன்ற சைபர் கொள்ளையர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னசன்ட் திவ்யா இருந்துவருகிறார். அக்டோபர் 10ஆம் தேதியன்று, இவரது பெயரில் போலி மின்னஞ்சல் உருவாக்கிய சில அடையாளம் தெரியாத நபர்கள், நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு உயர் அலுவலர்களுக்கு அமேசான் பரிசுக் கூப்பனை வாங்கி அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர்.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலர்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் குறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இன்னசன்ட் திவ்யா, தனது பெயரில் போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதைக் குறித்து, நீலகிரி மாவட்ட தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இது குறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, collrnlg@nic.in என்பது தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி என்ற மாவட்ட ஆட்சியர், தனது பெயரில் innocent divya directorexcutive356@gmail.com என்ற பெயரில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி, அதன்மூலம் அமேசான் பரிசுக் கூப்பன் வாங்குமாறு போலி மின்னஞ்சலை சமூக விரோதிகள் அனுப்பியுள்ளனர்.
அது போன்று தனது பெயரில் பரிசுக் கூப்பன் வாங்குமாறு மின்னஞ்சல் வந்தால், யாரும் அதனைத் திறந்து பார்க்க வேண்டாம் என்று கூறினார். மேலும், மின்னஞ்சலில் வரும் இணைப்பை எந்தவிதத்திலும் சொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறிய ஆட்சியர், இதை செய்தது யார் என்பதை விரைவில் பிடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறுகையில் சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருவதாகக் கூறினார்.