நீலகிரி மாவட்டம், குன்னூர் அருவங்காடு பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலை, வெடிமருந்து தயாரிப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. கார்கில் போர் வெற்றியில் இந்தத் தொழிற்சாலையின் பங்களிப்பு முக்கியமானது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்தத் தொழிற்சாலையை, மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மத்திய அரசு தொழிலாளர்கள், தீயணைப்புத் துறையினர், செவிலியர்கள், குழந்தைகள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிடாவிட்டால், வரும் 20ஆம் தேதியன்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.