வருடந்தோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதுமலை தெப்பகாடு யானை முகாமில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. முதுமலை யானைகள் முகாமில் உள்ள 25 யானைகளும் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டன. பின்பு யானைகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்பட்டு, யானைகளுக்கு சந்தனம் பொட்டுகள் இட்டு வரிசையாக நிற்க வைக்கப்பட்டன.
பின்னர் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்ற கிருஷ்ணா, கிரி என்ற வளர்ப்பு யானைகள், கோயில் முன் தும்பிக்கையை தூக்கியபடி நின்று மரியாதை செலுத்தின. அதன் பின், யானைக்கு பூஜை முடிந்த நிலையில் தோப்புக்கரணம் போட்டு கடவுளை வணங்கியது. பின்னர் மணி அடித்தவாறு கோயிலை சுற்றி வந்து மரியாதை செய்தது.
அதையடுத்து யானைகள் வரிசையாக உணவகத்திற்கு சென்றன. அங்கு யானைகளுக்கு சிறப்பு உணவுகளான பழங்கள், தேங்காய், கரும்பு மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து மருந்துகள் தயார் நிலையில் இருந்தன. யானைகள் தினம் என்பதால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வன அலுவலர்களும் கலந்துகொண்டனர்.