நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தைக் கொடுத்துவந்தது.
இதனிடையே தற்போது, பட்டப்பகலில் குஞ்சப்பனை நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்ற ஒற்றை யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், யானையைக் கண்டதும் நிலை தடுமாறி விழுந்து தலைதெறிக்க ஓடினர்.
சில நொடிகள் இருசக்கர வாகனத்தை தொட்டுப் பார்த்த யானை யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சாலையில் நடந்து சென்று பிறகு வனப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.