நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே உள்ள வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களான கோழிக்கரை, குரும்பாடி, புதுகாடு ஆகியவை அமைந்துள்ளன. இவற்றில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
ஆனால், இங்கு இரவு நேரங்களில் மின்கம்பங்களில் மின்சார விளக்குகள் எரியாமல் பல மாதங்களாக இருந்துள்ளன. வெளிச்சம் இல்லாத காரணத்தினாலும், வன விலங்குகள் அச்சுறுத்தலினாலும் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதுமட்டுமின்றி அருகில் உள்ள மின் கம்பம் துரு பிடித்து விழும் நிலையில் உள்ளதாகவும், கூறுகின்றனர். இதுகுறித்து மின்சார துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மின்சார துறையினரும் பர்லியார் பஞ்சாயத்தினரும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் உள்ள துரு பிடித்த மின் கம்பத்தை அகற்றியும், அங்குள்ள மின் விளக்குகளைச் சரிசெய்யும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.