நீலகிரி மாவட்டம், குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா, கடந்த ஏப்ரல் 6 ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாரியம்மன் தேர்த் திருவிழா நடைபெற்றது.
மேலும் தினந்தோறும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் நடந்து வந்த நிலையில், குன்னுார் சந்திரா காலனி பெரியார் பகுதியினரின் உற்சவ விழா நேற்று நடைபெற்றது. கரோலினா ஸ்ரீமாகாளியம்மன் கோயிலில் இருந்து பூக்காவடி, தீர்த்தக்குடம் எடுத்து மவுண்ட்ரோடு வழியாக தந்திமாரியம்மன் கோயிலை அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலையில் பெண்கள் சிங்காரி மேளத்துடனும், குழந்தைகளின் மயிலாட்டத்துடனும் மீண்டும் ஊர்வலமாக வந்தனர். இறுதியாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.