நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம்பெறுகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோமீட்டர் கொண்ட இந்த ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கைக் காட்சிகள் காணப்படுகின்றன.
பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளைக் கண்டு ரசிக்கலாம். இத்தகையச் சிறப்பு பெற்ற நூற்றாண்டு பழமைவாய்ந்த நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் தென்னக ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுபாராவ், ரயில்வே அலுவலர்களுடன் ரன்னிமேடு ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளைக் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபாராவ், "நீலகிரி மலை ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி வரை 6.8 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளோம். குன்னூர் - ஊட்டி இடையே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை கூடுதலாக மூன்று ஜாய் டிரெயின்கள் என்னும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கோவை, சேலம் உள்ளிட்ட ரயில்களில் இரு சுழற்சியாக கொரோனோ பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறு முறை கிருமி நாசினி தெளித்துs சுத்தப்படுத்தப்படுகிறது. இன்று முதல் இருமுறை சுழற்சி அடிப்படையில் சுத்தப்படுத்தப்படும். இதுதவிர கொரோனா தொற்று பாதிப்புள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அரியலூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் தீவிரம்