நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் ரேலியா அணை உள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் வானுயர்ந்த மரங்கள், அரிய வகை விலங்கான மர அணில், மான், காட்டெருமை, கரடி போன்றவை உள்ளனர. இந்த பகுதியில் சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் செல்ல வனத்துறை மற்றும் நகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது, விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கோடை காலம் தொடங்கிவிட்டதால், ரேலியா அணையை நோக்கி சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால், ரேலியோ அணையில் சமூக விரோத செயல்களும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இங்கு சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் மதுபாட்டில்கள், உணவு கழிவுகள், திண்பண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதாகக் கூறப்படுகிறது. குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரேலியோ அணை, தற்போது மாசுப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள காவலர்கள் பணம் வாங்கிக்கொண்டு சுற்றுலா பயணிப்பயணிகளை அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நகராட்சியும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இனி வருங்காலங்களில் சுற்றுலாப்பயணிகள் செல்ல முழுத்தடையை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.