நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசன்கள் மட்டும் இன்றி இங்கு உள்ள இயற்கை அழகைக் காணவரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவது வழக்கமான ஒன்று. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் இரயில் சேவை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் தண்டவாளத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு மரங்கள் விழுந்து தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதால் மீண்டும் ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டு சேதம் அடைந்தன.
இதன் காரணமாக வரும் 11ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் குன்னூர் வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீலகிரிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஸ் ஓட்ட தெரியாதுங்க.. நடுவழியில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்த தற்காலிக ஓட்டுநர்..!