கோவை: கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமம் அருகே சென்றபோது மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த கிராமமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு ஹெலிகாப்டர் விபத்து குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதன் பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தின்போது, நஞ்சப்பசத்திரம் கிராமமக்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.
குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கவும் முயன்றனர். மீட்புப் பணிகள் முடிந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல தங்களுடைய வீடுகளில் இருந்த போர்வைகளை ராணுவத்தினருக்கு தந்து உதவினர். இது ராணுவ அதிகாரிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, நஞ்சப்பசத்திரம் கிராமத்திற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் கிராமமக்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு 'இலவச மருத்துவ முகாம்' வழங்கப்படும் என அறிவித்தனர்.
மேலும், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அதற்கு தீர்வு காணுவதாக தெரிவித்தனர். அதன்படி அறிவித்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் செய்து முடித்ததாக கிராமமக்கள் கூறுகின்றனர். மேலும் இதுகுறித்து, விபத்தை முதன் முதலில் பார்த்து தீயை அணைக்க முயன்ற கிருஷ்ணசாமி கூறுகையில், '2021-ல் நடைபெற்ற சம்பவம் இன்னும் கண்முன் நிற்கிறது. ஹெலிகாப்டர் விழுந்தவுடன் ஒரே புகை மூட்டமாக இருந்து திடீரென வெடித்து சிதறியது. இதில் சிலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர். அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில், ஒருவரைக்கூட காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் இன்றும் மனதில் உள்ளது.
எங்கோ இருந்த முப்படை தளபதி, எங்கள் ஊரில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்து நடந்தபோது, எங்கள் மக்கள் உதவியதை பார்த்து ராணுவ அதிகாரிகள் எங்களுக்கு உதவுவதாக உறுதியளித்தனர். அதன்படி, ஒரு ஆண்டு முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தினர். பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். போர்வைகள், மளிகைப் பொருட்களும் வாங்கி தந்தனர்.
தற்போது, ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் 'நினைவுத் தூண்' அமைத்துள்ளனர். 3 மாத காலமாக நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ஆம் தேதி இந்த நினைவுத் தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளதாக' கூறினார்.
மேலும் நஞ்சப்பசத்திரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கூறுகையில், 'ராணுவத்தினர் கொடுத்த வாக்குறுதிகளை செய்துள்ளனர். அவர்களிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்கப்பட்ட நிலையில், மாநில அரசு மட்டுமே அதனை வழங்க முடியும் எனக் கூறியதை அடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் தங்களது கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், இந்த கோரிக்கையும் நிறைவேறும் என காத்திருப்பதாக' தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உயிரிழந்த முப்படை தளபதி உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும், "ஆன்மா அழியாதது, எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது, தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்படுத்த முடியாது" என்கிற பகவத் கீதையின் வாசகமும் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான படை ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள்:
- முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்
- பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்
- ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிக் லக்பிந்தர் சிங் லிடர்
- அலுவலர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்
விமானப்படை ஹெலிகாப்டர் குழுவினர் உள்பட 9 பாதுகாப்பு படை வீரர்கள்:
- விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான்
- படைத் தலைவர் குல்தீப் சிங்
- ஜூனியர் வாரண்ட் அலுவலர் ராணா பிரதாப் தாஸ்
- ஜூனியர் வாரண்ட் அலுவலர் அரக்கல் பிரதீப்
- ஹவில்தார் சத்பால் ராய்
- நாயக் குர்சேவக் சிங்
- நாயக் ஜிதேந்திர குமார்
- லான்ஸ் நாயக் விவேக் குமார்
- லான்ஸ் நாயக் பி சாய் தேஜா
- ஹெலிகாப்டர் ஓட்டுநர் குரூப் கேப்டன் வருண் சிங்
மேலும் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்த கிருஷ்ணசாமி, குமார் தலா ரூ.5000 ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ.அருண் பரிசாக வழங்கினார். முன்னதாகத் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலினுக்கு ஏ.அருண் வாழ்த்துத் தெரிவித்து அறிக்கை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்று நாட்களாக முடங்கி கிடக்கும் தென்சென்னை.. இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?