நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறுவதையொட்டி, பணம் விநியோகத்தைத்தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் அந்தந்தத் தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும் படையினர் வாகனசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. மேலும், அரசியல் கட்சித்தலைவர்கள் வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையைத் தொடங்கியுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துவருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னுார்வருவாய்த் துறை சார்பாக நேற்று (மார்ச் 23) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மவுண்ட் சாலையில் திடீரென வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டு, கல்லுாரி மாணவ-மாணவிகள் நடனமாடினர்.
இதில், மாணவர்கள் மேற்கத்திய பாடல்கள், கானா பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த ஆடல்பாடல்களுடன்,வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் புகைப்படங்கள், வீடியோக்கள்எடுத்துச்சென்றனர்.