நீலகிரி: குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு, ராணுவத்தினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
விபத்து குறித்து முப்படைகளின் சார்பில் விசாரணை அலுவலராக ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டுத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்து நடந்த பகுதியை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
ராணுவம், விமான படையினர் விபத்து நடந்த பகுதியில் கிடக்கும் சிதைந்த ஹெலிகாப்டர் பாகங்களைச் சேகரித்துவருகின்றனர். சேகரிக்கப்படும் பாகங்களை சூலூர் விமான படைத்தளத்துக்கு கொண்டுசெல்லவுள்ளனர். ஆனால் சாலை வசதி இல்லாததால், சிதைந்த பாகங்களைக் கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து காட்டேரி பூங்கா ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் இங்கு செல்ல சாலை வசதி குறைவு. மேலும் மேட்டுப்பாளையம்-குன்னூர் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய குதிரை வழிப்பாதையைப் பயன்படுத்த முடியும்.
விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் சாலையை அடைந்துவிட முடியும். ஆனால் இப்பாதை தற்போது யானை வழித்தடமாக உள்ளது. எனினும், இவ்வழியைப் பயன்படுத்துவது குறித்து விமான படை, ராணுவத்தினர் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 17 கோடி ரூபாய் முறைகேடு..52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!