குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இதில் ராணுவம், விமானப்படை, கப்பற்படையைச் சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வெலிங்டன் ராணுவ கல்லூரியில் இந்திய நாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் நட்பு நாடுகளின் வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ராணுவ கல்லூரி மற்றும் பாரஸ்ட் டேல் இடையேயுள்ள சாலையில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ராணுவ கல்லூரி வளாகத்தில் இரவு நேரத்தில் 2 சிறுத்தைகள் நடமாடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து ராணுவ கல்லூரி நிர்வாகம் வனத்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதன் பேரில் ராணுவ கல்லூரி வளாகத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.