நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி, காபி காடு, சுங்கம் போன்ற பகுதிகளில் தந்தை மகன் உள்ளிட்ட மூன்று பேரையும் யானை தாக்கி கொன்றது. இதனால், யானைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அந்த காட்டு யானை கேரளா வனப்பகுதிக்குள் சென்றதால், இருமாநில வனத்துறையினரும் கண்காணித்தனர். இந்நிலையில் கேரளா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த யானை, மீண்டும் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மழவன் சேரம்பாடி மற்றும் காபி காடு பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளது.
ஐந்து கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில், 50 வேட்டை தடுப்பு காவலர்கள், கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாறன், ராஜேஷ் ஆகிய மருத்துவ குழுவினர் நேற்று(பிப்.10) பிற்பகல்வரை ஆட்கொல்லி யானையை கண்காணித்து மயக்க ஊசி செலுத்தினர்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் யானை, கூட்டத்துடன் இருந்ததால் ஆட்கொல்லி யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக இன்று (பிப்.11) காலை வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாறன் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் யானையை பிடிக்கும் பணியிலிருந்து இருவரும் தங்களை விலக்கிக் கொண்டனர்.
பின்னர், மருத்துவர்கள் அசோகன், விஜயராகவன் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டு, யானையை பிடிக்கும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், யானையை உடனடியாக பிடிக்காவிட்டால் தொடர் போராட்டம் வனத்துறைக்கு எதிராக நடத்தப்படும் என கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி