நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்தப்பகுதி ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டரின் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதையடுத்து ராணுவக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன்பின் அந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடற்படை தளபதி ஹரிகுமார் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ராணுவப்பயிற்சி கல்லூரிக்கு இன்று (மார்ச் 16) வருகை தந்தார். பின், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்தார். இவரது வருகையால் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க: புனிதமான சட்டப்பேரவையில் மாதவிடாய் விடுமுறை குறித்துப் பேசுவதா? - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப்பேச்சு