முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சென்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். நீலகிரி மாவட்டத்திற்கான கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் நாளை (நவ.6) உதகையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதகை வருகிறார். இதனால் உதகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் விருந்தினர் மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் முதலமைச்சர் இன்று (நவ.5) மாலை மேட்டுப்பாளையத்தில் தங்குகிறார். நாளை (நவ.6) காலை அங்கிருந்து கோத்தகிரி சாலை வழியாக உதகை வருகிறார்.
முதலாவதாக சுமார் ரூ. 520 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டபணிகள் திறப்பு விழா, எமரால் கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா, நல திட்ட உதவி வழங்கும் விழா ஆகியவற்றில் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து கரோனா ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும், அவர் மதியம் 1 மணிக்கு திருப்பூருக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: வருவாய்துறை புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர்!