நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உதகமண்டலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு படுகர், தோடர் இன மக்களின் நடனத்துடன், மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நீலகிரி மாவட்டத்தில் ரூ.131.57 கோடி மதிப்பிலான 123 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதோடு, ரூ.95 கோடி மதிப்பிலான எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் உட்பட, ரூ.189.35 கோடி மதிப்பில் நிறைவடைந்த 67 திட்டப் பணிகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும், 4,198 பேருக்கு 199.65 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். இன்கோ சர்வ் நிறுவனத்தின் சார்பாக 5 புதிய தேயிலை விற்பனை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகனங்களையும் வழங்கினார். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேல் யாத்திரை - திருத்தணி புறப்பட்டார் முருகன்!