நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 2017ஆம் ஆண்டு கார் ஓட்டுநர், காவலாளி உள்ளிட்ட ஐந்து பேர் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள தீபு, பிஜின்குட்டி, மனோஜ், சதீசன், உதயக்குமார், ஜம்சீர் அலி, ஜித்தீன் ஜாய், மனோஜ் சாமி உள்பட எட்டு பேர் பிணை பெற்று கேரளா மாநிலத்தில் தற்போது உள்ளனர். இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக வழக்கு கடந்த இரண்டு மாதங்களாக காணொலி மூலமாக நடைப்பெற்று வந்தது.
தொடர்ந்து, இவ்வழக்கின் முக்கிய சாட்சியான சாந்தா என்ற பெண், வழக்கை விரைந்து முடிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை 90 நாள்களில் முடிக்க உதகை மாவட்ட நீதி மன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவ்வழக்கு வருகின்ற 21ஆம் தேதி உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளதால், குற்றவாளிகள் 10 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டண வசூலில் முறைகேடு; முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் மனு