மலை மாவட்டமான நீலகிரி சர்வதேச சுற்றுலாத் தலமாகும். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்க ஆண்டுதோறும் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனாகும்.
இந்தக் கோடை சீசனை அனுபவிக்கவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனைத் திரவிய கண்காட்சி, பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, படகுப் போட்டி உள்ளிட்ட உலக பிரசித்திப் பெற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்நிலையில் இந்தாண்டு கரோனா தீநுண்மி தொற்று பரவும் அச்சம் காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் முன்கூட்டியே மார்ச் 17ஆம் தேதி மூடபட்டன. இதனால் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கோடை சீசனுக்காக பூங்காக்களில் நடவுசெய்யப்பட்ட பல லட்சம் மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூ பூத்துக் குலுங்குகின்றது. குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடவுசெய்யப்பட்ட ஐந்து லட்சம் மலர் செடிகளில் பூ பூத்துக் குலுங்கி கண்களைக் கொள்ளைகொள்ளும் வகையில் காட்சியளிக்கின்றது.
மேலும் 230 வகைகளில் 40 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் டெய்லியா, ஆஸ்டர், பெட்டுன்னியா, காலண்டுல்லா, மெரி கோல்டு, பிரஞ்சு மெரி கோல்டு, உள்ளிட்ட மலர்களின் வண்ணங்கள் கண்களைக் கவர்கின்றன. மேலும் கிக் கியூ புல்வெளிகள் பச்சை கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கின்றன. ஆனால் இவற்றைக் காண சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறவிருந்த உலக பிரசித்திப் பெற்ற 124ஆவது மலர்க் கண்காட்சியானது கேள்விக் குறியாகியுள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் மே மாதத்தில் நடைபெறும் கோடை விழா நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யக்கூடும் எனத் தெரியவருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகள் வராததால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாமல் நீலகிரி மாவட்டம் தூய்மையாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட் 19 பெருந்தொற்றைப் பரப்பியது வௌவால்களா? - ஆய்வாளர்கள் விளக்கம்