நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், நேற்று (மார்ச்.17) மதியம் கோத்தகிரி பகுதியைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் இட்டக்கல் போஜராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு உதகை ஏடிசி பேருந்து நிலைய பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் விதிகளை மீறி அனுமதி பெறாமல் ஏராளமான பாஜகவினர் சாலையில் கூடியதுடன், பட்டாசுகளையும் வெடித்தனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதையடுத்து, போக்குவரத்து சீரமைப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக வாகனத்தை நிறுத்திய பாஜக சிறுபான்மைப் பிரிவு தலைவருக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்த பாஜகவினர் காவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெறாமல் திடீரென வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியது, பட்டாசு வெடித்தது, காவலரை மிரட்டுதல் உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் பறக்கும் படையினர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் வருகை: பட்டாசு வெடித்த தொண்டர்கள் பலருக்கும் தீக்காயம்!