கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமான வாத்துகள் செத்து மடிந்தன. இதனால் அம்மாநில அரசானது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வாத்துகள், கோழிகளை கொன்று அளிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பறவை காய்ச்சலானது தமிழ்நாட்டில் பரவுவதை தடுக்க, தமிழ்நாடு - கேரளா எல்லைகளான நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர், மேலும் கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு மாவட்டத்தை இணைக்க கூடிய 7 சோதனை சாவடிகள் மற்றும் கர்நாடக மாநில எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி உட்பட 8 எல்லை சோதனை சாவடிகளில் தமிழ்நாடு அரசு சார்பாக குழு அமைத்து கால்நடை துறையினர் கடும் ஆய்வு செய்யும் பணியில் இன்று (ஜன.06) முதல் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணியானது கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழி பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சிகளையோ, முட்டைகளையோ தமிழ்நாட்டிற்கு வர முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாட்டு தீவனங்கள், கோழி தீவனங்கள், வளர்ப்பு பறவைகளும் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது.
அதுபோல கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்தும் வாகனங்களுக்கும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதோடு, வாகனங்களின் டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னரே தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு பணியில் ஒரு கால்நடை மருத்துவர் உட்பட தலா 5 பேர் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில், கால்நடை துறையினர் மட்டுமின்றி வருவாய் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி - கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள் ஏற்றி வரத் தடை!