நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் கேரளாவில் இருந்து வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் வவ்வால் ஒன்று மின்கம்பத்தில் சிக்கி உயிரிழந்து தொங்கிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக, மின் வாரியத் துறையினருக்கு தகவல் தெரிவிததும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.
மின் கம்பத்தில் சிக்கி தொடர்ந்து உயிரிழந்து வரும் வவ்வால்கள் இதனால் கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கிய நிலையில், நோய் தொற்று அச்சம் அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று (அக்.22) வெலிங்டன் அம்பேத்கார் நகர் பகுதியில், கொய்யா பழங்களை சுவைக்க வந்த வவ்வால் ஒன்று மீண்டும் மரத்தின் அருகே உள்ள மின் கம்பத்தில் சிக்கி உயிரிழந்தது.
தொடர்ந்து, இது குறித்து வனத்துறைக்கு இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனச்சரகர் சசிகுமாரின் உத்தரவின்பேரில் வனக்காவலர்கள் ஞானசவுந்தரி, மருதன் அங்கு வந்து இறந்த வவ்வாலை அகற்றி அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ”வவ்வால்கள் பழங்களை கொத்திச் செல்ல வந்து, இங்குள்ள மின் கம்பத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இந்நிலையில், அவற்றை அலுவலர்கள் உடனுக்குடன் அகற்றாமல் கால தாமதம் செய்வதால், துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது” எனப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.